ஜெயலலிதா சொத்துக்களை அரசுடமையாக்க கோரிய வழக்கு தள்ளுபடி...

ஜெயலலிதா சொத்துக்களை அரசுடமையாக்க கோரிய வழக்கு தள்ளுபடி...

ஜெயலலிதா சொத்துக்களை அரசுடமையாக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை மதுரை ஐகோர்ட்டு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா ஏராளமான சினிமாவில் நடித்து பல கோடி ரூபாய் சம்பாதித்தார். அவர், கடந்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி இறந்தார்.

கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் போட்டியிட்ட போது, அவரது சொத்து விவரங்களை அபிடவிட்டாக தாக்கல் செய்தார்.

இதுதவிர தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் அவருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் உள்ளன. அந்த சொத்துகளை தனக்கு பின் யார் நிர்வகிப்பார்கள் என்பது தொடர்பாக அவர் எதுவும் குறிப்பிடவில்லை. அவருக்கு நேரடி வாரிசும் இல்லை.

ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து, ஜெயலலிதாவின் சொத்துகளை கண்டறிந்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அந்த அறிக்கையின்படி அவருடைய சொத்துகளை அரசுடைமையாக்க வேண்டும். பின்னர் அந்த சொத்துகளை ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் குழு நிர்வகித்து, சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஏழைகளுக்கு செலவிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் செல்வம், கலையரசன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தனி நபர் சொத்து குறித்து பொதுநல வழக்கு தொடர முடியாது. இதற்கு சட்டத்தில் அங்கீகாரம் இல்லை. இதுபோன்ற வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டன. அதேபோல் இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.