சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்காவிட்டால் பதிலடி கொடுப்போம்- அமைச்சர் உதயகுமார்

சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்காவிட்டால் பதிலடி கொடுப்போம்- அமைச்சர் உதயகுமார்

திருமங்கலம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடந்தது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

வியாபார நோக்கத்திற்காக இன்று அம்மாவின் திட்டங்களையும் உழைப்பையும் கொச்சைப்படுத்தும் விதமாக சர்கார் படத்தில் சில காட்சிகள் வந்துள்ளது.இது ஒட்டுமொத்த உலக தமிழினத்தின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பது நமக்கெல்லாம் வேதனையாக உள்ளது.வியாபார நோக்கத்திற்காகவும் லாப நோக்கத்திற்காகவும் போட்ட முதலீட்டை எடுப்பதற்காக, எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்றால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வியாபார, அரசியல் நோக்கத்தோடு அந்த காட்சியை வடிவமைத்தார்கள் என்று சொன்னால் அதனை ஜெயலலிதா பேரவை வன்மையாக கண்டிக்கிறது.இதனை உடனடியாக அவர்களே நீக்க வேண்டும். அம்மாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தினால் அதனை முதலில் கண்டிப்போம், எச்சரிப்போம்.தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பேரவை தொண்டர்கள் உயிரை கொடுத்தாவது அவரது புகழை காப்போம்.

அம்மாவின் திட்டங்களைப் பற்றி விவாதிக்க தயாராக உள்ளோம். ஐக்கிய நாடு சபையில் பாராட்டுப்பெற்ற திட்டங்களை எல்லாம் கொச்சைப்படுத்துவது என்பது அம்மா புகழை கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே கொச்சைப்படுத்துவதாகும்.இதனை ஜெயலலிதா பேரவை வன்மையாக கண்டிக்கிறது. அந்தக் காட்சி நீக்கப்பட வேண்டும்.இல்லையென்றால் ஜெயலலிதா பேரவை சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.மேற்கண்டவாறு அவர் கூறினார்.