நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை...

 நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை...

இந்திய பெருங்கடல் பகுதியில் குமரிக்கு தெற்கே, மாலத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று உள்ளது. இது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து பின்னர், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று லட்சத்தீவை நோக்கி நகரும்.

இதன் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 14-ந் தேதி மற்றும் 15-ந் தேதி அநேக இடங்களில் மழை பெய்யும். இதில் சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.  இதேபோன்று, நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி என அனைத்து அருவிகளிலும் இரவு முழுவதும் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  இதனால் அங்கு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.