கொடநாடு சம்பவத்தில் எனக்கு எந்த  தொடர்பும் இல்லை-  எடப்பாடி

கொடநாடு சம்பவத்தில் எனக்கு எந்த  தொடர்பும் இல்லை-  எடப்பாடி

சென்னை: நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு காவலாளியாக பணியாற்றிய ஓம்பகதூரை படுகொலை செய்துவிட்டு, பங்களாவுக்குள் புகுந்து ஜெயலலிதாவுக்கு சொந்தமான 5 கைக்கடிகாரங்கள், பளிங்கு கற்களால் ஆன அழகுசாதன பொருட்கள் ஆகியவற்றை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது என போலீஸ் 2017 ஏப்ரலில் தெரிவித்தது. 

இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், புது சர்ச்சையொன்று வெடித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் குற்றவாளி  சயன் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறியுள்ளார். இவ்விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 இந்நிலையில் இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கொடநாடு சம்பவத்தும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புகின்றனர். கொடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோ ஆதாரத்தில் கூறப்பட்டவை உண்மையில்லை. தவறான செய்தி வெளியிட்டவர்கள், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர்.