தாமிரபரணியில் களைகட்டிய மகா புஷ்கர விழா...லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

தாமிரபரணியில் களைகட்டிய மகா புஷ்கர விழா...லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகளுடன் தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், படித்துறைகளில் ஏராளமான பொதுமக்கள் புனித நீராடினர்.குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனதை தொடர்ந்து விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

144 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது. மகா புஷ்கர விழா இன்று(11-ந் தேதி) முதல் வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக கடந்த ஒரு ஆண்டாகவே பல்வேறு ஆன்மீக அமைப்புகள் ஏற்பாடுகளை செய்து வந்தன.தாமிரபரணி நதி தொடங்கும் பொதிகை மலையின் பூங்குளத்தில் இருந்து இறுதியாக கடலில் சென்று கலக்கும் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 149 படித்துறைகளில் புஷ்கர விழா கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்த புஷ்கர விழாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்கர விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு ஆரத்தி, மாநாடுகள், கலைநிகழ்ச்சிகள், அன்னதானம், பொங்கலிடுதல், சிறப்பு யாகங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர், முக்கூடல், தென்திருப்புவனம், சேரன் மகாதேவி, மேலச்செவல், சுத்தமல்லி, கோடகநல்லூர், பழவூர், திருவேங்கடநாதபுரம், குறுக்குத்துறை, தைப்பூச மண்டபம், வண்ணார் பேட்டை, எட்டெழுத்து பெருமாள் கோசாலை ஜடாயுதீர்த்தம், சீவலப்பேரி உள்ளிட்ட இடங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை, ஏரல், ஆத்தூர், புன்னக்காயல் உள்ளிட்ட பகுதிகளிலும் தாமிரபரணிக்கு மஹா ஆரத்தி வழிபாடுகள் நடக்கின்றன.

அகில பாரதீய துறவியர்கள் சங்கம் சார்பாக பாபநாசம் படித்துறையில் இன்று அதிகாலை தாமிரபரணி புஷ்கர விழா தொடங்கப்பட்டது. இதையொட்டி சங்கராசாரியார்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள், சாதுக்கள், துறவியர்கள் கலந்து கொண்டு 108 புண்ணிய நதி கலச தீர்த்தங்களை தாமிரபரணி ஆற்றில் ஊற்றினர். இதைத்தொடர்ந்து சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து புஷ்கர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தாமிரபரணி நதிக்கரையில் உள்ள படித்துறைகளில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பாபநாசம், அம்பை, சேரன்மகாதேவி, சுத்தமல்லி, குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை, தைப்பூச மண்டபம், முறப்பநாடு, ஸ்ரீவை குண்டம், ஏரல் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்.

பாபநாசத்தில் துறவியர்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு தாமிரபரணி மகா புஷ்கர விழாவை தொடங்கி வைத்து விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து துறவியர்கள் மாநாட்டையும் கவர்னர் தொடங்கி வைத்தார். பாபநாசம், வி.கே.புரம் சித்தர்கள் கோட்டம் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பாக 28-வது தீர்த்த கட்டமான திரிநதி சங்கம தீர்த்தத்தில் இன்று புஷ்கர விழா தொடங்கியது. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது. இங்கு 54 ஓமகுண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில் ஓமம் வளர்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தனர். இன்று காலை அங்கு தசமகாவித்யா ஓமம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொள்கிறார். கோசாலையில் வழிபாடு நடத்தும் அவர் தொடர்ந்து அங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் காசியில் கங்கைக்கு நடைபெறுவது போன்று நடத்தப்படும் மகா ஆரத்தியை தொடங்கி வைக்கிறார்.காஞ்சி காமகோடி பீடம் மற்றும் ஸ்ரீ சங்கர பகவத் பாதாசார்ய பரம்பராகத மூலாம் நாயசர் வஞ்ய பீடம் சார்பாக புடார்ச்சன சேத்திரம் எனப்படும் திருப்புடைமருதூரில் தாமிரபரணி புஷ்கர விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இன்று மாலை நடைபெறும் விழாவில் கவர்னர் கலந்து கொள்கிறார்.

நெல்லை தைப்பூச படித்துறையில் இன்று காலை கணபதி ஹோமத்துடன் தாமிரபரணி மகா புஷ்கரவிழா தொடங்கியது. தொடர்ந்து அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. இதில் சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள், ஆதினங்கள், மடாதிபதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். இங்கும் மாலை 6 மணிக்கு தாமிரபரணிக்கு மகா ஆரத்தி நடைபெறுகிறது.தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆற்றில் பக்தர்கள் நீராட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆற்றில் ஆழமான பகுதிகளில் மணல் மூட்டைகள் குவிக்கப்பட்டுள்ளன. ஆற்றில் பக்தர்கள் நீராடும் போது பாதுகாப்புக்காக படகுகளுடன் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பாபநாசம், வீரவநல்லூர், அத்தாள நல்லூர், திருப்புடைமருதூர் மற்றும் முறப்பநாடு, ஏரல், முக்காணி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் ரெயில் மூலம் வருபவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்காக நெல்லை ரெயில் நிலையத்தில தமிழக சுற்றுலாதுறை சார்பில் தகவல் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரி நேரடி மேற்பார்வையில் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டுகள் நெல்லை அருண்சக்திகுமார், தூத்துக்குடி முரளி ரம்பா, நெல்லை மாநகர கமி‌ஷனர் மகேந்திரகுமார் ரத்தோட் ஆகியோர் ஏற்பாட்டில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் தாமிரபரணி நதியில் உள்ள படித்துறைகள், தீர்த்த கட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.புஷ்கர விழாவை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் வாகனங்கள் நிறுத்த இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது. நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் 13 நாட்களுக்கு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.நெல்லையில் விழா நடைபெறும் இடங்களில் மாநகராட்சி சார்பாக குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.