ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து அதிர்ச்சி அளிக்கிறது - டாக்டர் தமிழிசை

ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து அதிர்ச்சி அளிக்கிறது - டாக்டர் தமிழிசை

ஜல்லிக்கட்டு வழக்கில் பொங்கலுக்கு முன்பு தீர்ப்பு வழங்க இயலாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது என்று டாக்டர் தமிழிசை கூறி உள்ளார்.

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு வழக்கில் பொங்கலுக்கு முன்பு தீர்ப்பு வழங்க இயலாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த விவகாரம் மத்திய அரசின் கைகளில் இல்லை. சுப்ரீம் கோர்ட்டின் கைகளில் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை சுப்ரீம் கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டது. அவசர சட்டம் கொண்டு வந்தாலும் அதே நிலை தான் வரும்.

எனவே தான் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் மத்திய அரசு இந்த பிரச்சினையை கையாண்டு வருகிறது. அகில இந்திய தலைவர்கள் இடையே ஜல்லிக்கட்டு பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் தமிழக பா.ஜனதாவின் அழுத்தம் காரணமாக ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெற வேண்டும் என்ற வாதத்தை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வக்கீல் தெளிவாகவும், வலிமையாகவும் எடுத்து வைத்துள்ளார்.

இதன் மூலம் மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு எதிரானது அல்ல என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. எங்கள் நோக்கம் ஜல்லிக்கட்டு நடைபெறவேண்டும் என்பது தான். அவசர சட்டமும் தடைபட்டு விடக்கூடாது என்பது தான் .

முக்கிய பிரச்சினைகளில் நீதிமன்றமும் மக்கள் உணர்வுகளோடு ஒன்றியிருக்க வேண்டும். ஒரு மருந்தை இன்று கொடுத்தால் தான் நோயாளி காப்பாற்றப்படுவான் என்று இருக்கும்போது நாளை தான் அந்த மருந்தை கொடுப்போம் என்பதை போல்தான் சுப்ரீம் கோர்ட்டின் கருத்தும் இருக்கிறது.

பொங்கல் முடிந்தபிறகு தீர்ப்பு வழங்குவது எந்த பலனும் இல்லை. நாங்கள் தமிழர்களின் உணர்வுகளை மதிக்கிறோம்.

இனியும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டை நடத்துவது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.