கோர்ட்டு தடையை மீறி அரசு ஊழியர்-ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டம்

கோர்ட்டு தடையை மீறி அரசு ஊழியர்-ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டம்

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோவில் ஒரு பிரிவினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது. பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை உரிமையாக கருத முடியாது என்று எச்சரித்ததோடு நாளை (15-ந்தேதி) கோர்ட்டில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஆனால் கோர்ட்டு உத்தரவை மீறி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.தொடர்ந்து அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தையும், அரசு அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.நேற்று காத்திருப்பு போராட்டம் என்ற பெயரில் அரசு அலுவலகங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் போராட்ட களத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் போராட்டத்தை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த விளக்கத்தையும் தமிழக அரசு கோர்ட்டில் அளிக்க வேண்டும் என்று உத்தர விட்டார்.அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக 17ஏ நோட்டீசு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

தற்போது தற்காலிக வேலை நீக்கம் செய்யக்கூடிய 17-பி நோட்டீசு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு அந்தந்த துறை அதிகாரிகள் விளக்க நோட்டீசை தபால் மூலமாகவும், நேரிலும் வழங்கி வருகிறார்கள்.