காவிரி மேலாண்மை வாரியத்துக்கே முழுமையான அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

 காவிரி மேலாண்மை வாரியத்துக்கே முழுமையான அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

காவிரி பிரச்சினை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி உத்தரவிட்டதோடு, இந்த தீர்ப்பையும், நடுவர் மன்ற தீர்ப்பையும் அமல்படுத்துவதற்கான வரைவு செயல்திட்டத்தை ஏற்படுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

கர்நாடக சட்டசபை தேர்தலை காரணமாக கூறி, வரைவு செயல்திட்டத்தை தாமதப்படுத்திய மத்திய அரசு நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை அதை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.அந்த வரைவு செயல்திட்டத்தில், காவிரி நீரை பகிர்ந்து கொள்ள, நீர்வளம் மற்றும் நீர் மேலாண்மையில் செயல்திறன் கொண்ட பொறியாளர் தலைமையில் 10 பேர் கொண்ட வாரியம், ஆணையம் அல்லது குழு அமைக்கப்படும் என்றும், இதன் தலைமையகம் பெங்களூருவில் இயங்கும் என்றும், மேலும் காவிரி ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது. இந்த இரு குழுக்களின் பணிகள் பற்றியும் அதில் விரிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வரைவு செயல்திட்டத்தின் நகல்களை தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கும் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அதுபற்றிய கருத்தை 16-ந் தேதி தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.அதன்படி, இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் தரப்பில், மத்திய அரசின் வரைவு செயல்திட்டம் குறித்த கருத்துகள் அடங்கிய அறிக்கைகள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் சேகர் நாப்டே, ராகேஷ் திவிவேதி, வக்கீல் ஜி.உமாபதி, சி.பரமசிவம் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.மூத்த வக்கீல் சேகர் நாப்டே வாதாடுகையில், மத்திய அரசு முன்வைத்துள்ளது போன்ற அமைப்புக்கு பொதுவாக ‘வாரியம்’ என்று பெயரிடுவது வழக்கம். உதாரணத்துக்கு ‘கோதாவரி மேலாண்மை வாரியம்’ என்று அழைக்கப்படுவது போல இதனை ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என அழைக்கலாம் என்று கூறினார்.

உடனே தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இது குறித்து மத்திய அரசு தரப்பில் ஆஜராகி இருந்த அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் கருத்து கேட்டார்.அதற்கு அவர், “இந்த அமைப்பை ‘வாரியம்’ என்று அழைப்பதற்கு மத்திய அரசுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை” என்று தெரிவித்தார். இதேபோல் கர்நாடக அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து சேகர் நாப்டே, இந்த அமைப்புக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை தலைமை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார்.

அதன்பிறகு, இந்த அமைப்பின் தலைமை அலுவலகத்தை பெங்களூருவுக்கு பதிலாக டெல்லியில் அமைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டு இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் டெல்லியில் இருக்கும் என்றும், காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைமையகம் பெங்களூருவில் இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

கேரள அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா வாதாடுகையில், அணைகள் மாநில அரசுக்கு சொந்தமானவை என்றும், எனவே அவற்றில் தண்ணீரை தேக்கி வைப்பது, பங்கீடு செய்வது, ஒழுங்குபடுத்துவது ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்றும் கூறினார். காவிரி வரைவு செயல்திட்டத்தில், மேற்கண்ட செயல்பாடுகளை சம்பந்தப்பட்ட அமைப்பு கவனித்துக்கொள்ளும் என்று கூறி இருப்பது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக இருப்பதால், இந்த பிரிவில் திருத்தம் செய்யவேண்டும் என்று கூறினார்.

ஆனால் தலைமை நீதிபதி, மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறுகள் தேசிய சொத்து என்பதால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி நிராகரித்து விட்டார். அத்துடன், மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகளை எந்த மாநிலமும் தனிப்பட்ட முறையில் உரிமை கோர முடியாது என்று கூறிய தலைமை நீதிபதி, காவிரி படுகையில் கர்நாடகமோ, தமிழகமோ புதிதாக அணைகள் எதையும் கட்டக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தனது தீர்ப்பில் கூறி இருப்பதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

ஜெய்தீப் குப்தா மேலும் வாதாடுகையில், கேரளா மாநிலத்துக்கு 4 சதவீதம் தண்ணீர் மட்டுமே அளிக்கப்படும் நிலையில், அமைப்புக்கான செலவுத்தொகையில் 15 சதவீதத்தை ஏற்க வேண்டும் என்பதை மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.அதையும் கோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது.

இதைத்தொடர்ந்து கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஷியாம் தவான் வாதாடுகையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அங்கு இன்னும் புதிய அரசு அமைக்கப்படவில்லை. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வரைவு செயல்திட்டம் குறித்து மற்ற மாநிலங்களைப் போல் நாங்களும் எங்கள் தரப்பு கருத்துகளை தெரிவிக்க விரும்புகிறோம்.

இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கப்போகிறது. எனவே நாங்களும் ஆக்கபூர்வமான கருத்தை தெரிவிக்க உரிமை இருக்கிறது. மத்திய அரசுக்காக இந்த வழக்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, கர்நாடகம் தனது கருத்தை தெரிவிக்க போதிய அவகாசம் அளிக்கும் வகையில், வழக்கு விசாரணையை ஜூலை மாதம் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதாடுகையில் கூறியதாவது:-கர்நாடக மாநிலத்தில் அரசாங்கம் இல்லை என்ற வாதத்தை அவர்கள் முன்வைக்க முடியாது. அரசாங்கம் என்பது எப்போதும் உள்ளது. அரசியல் சட்டத்தின் அடிப்படையில் வெற்றிடம் என்பது எப்போதும் கிடையாது. கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்று ஜூலை வரை விசாரணையை ஒத்திவைத்தால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவது கடுமையாக பாதிக்கப்படும். எனவே இந்த கோரிக்கையை ஏற்கக்கூடாது. எதுவாக இருந்தாலும் இப்போதே முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, கர்நாடக தரப்பில் விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.“இந்த வரைவு செயல்திட்டத்தை தயாரித்து இருப்பது மத்திய அரசு. சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டுள்ளதா? என்பதை மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும். எனவே, கர்நாடகத்தின் இந்த கோரிக்கையை ஏற்க முடியாது” என்று அப்போது அவர்கள் கூறினார்கள்.

அத்துடன் இந்த அமைப்பின் பெயர், அமைப்பின் தலைமை அலுவலகம் செயல்படும் இடம் மற்றும் முடிவை செயல்படுத்துவதில் அமைப்புக்கு இருக்கும் அதிகாரம் ஆகிய பிரிவுகளில் திருத்தங்களை செய்து, புதிய வரைவு அறிக்கையை இன்று (வியாழக்கிழமை) கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.