துரைமுருகனை கண்டித்து தே.மு.தி.க. மறியல்

துரைமுருகனை கண்டித்து தே.மு.தி.க. மறியல்

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த ரகசிய பேச்சு வெளியானதால தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் காரசாரமாக மோதிக் கொண்டனர்.தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தன்னை தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டணி சம்பந்தமாக பேசினர். ஆனால் தி.மு.க.வில் சீட் இல்லை என கூறியதாக பேட்டியளித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த சுதீஷ், துரைமுருகனை தே.மு.தி.க. நிர்வாகிகள் தனிப்பட்ட காரணத்துக்காக மட்டும் சந்தித்தனர். கூட்டணி பற்றி பேசவில்லை என்றார். மேலும் துரைமுருகன் அவரது கட்சி குறித்தும், தலைமை பற்றியும் கூறியதை நான் சொன்னால் அசிங்கமாகிவிடும் என்றார்.

இதற்கு பதிலடியாக துரைமுருகன் அளித்த பேட்டியில் சுதீஷ் மீது வைத்திருந்த மரியாதைக்கு அவரே குந்தகம் ஏற்படுத்துகிறார். தே.மு.தி.க.வினர் பாவம் நொந்து போயிருக்கிறார்கள். மேலும் கருத்துக்கூறி அவர்களை புண்படுத்த விரும்பவில்லை என்றார்.

இதனால் துரைமுருகன் மீது தே.மு.தி.க.வினர் கோபம் அடைந்துள்ளனர்.இந்த நிலையில் காட்பாடியில் துரைமுருகன் வீடு அமைந்துள்ள ஓடைபிள்ளையார் கோவில் அருகில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் பிரதாப் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.