சென்னை- சேலம் 8 வழிச்சாலை வழக்கு: ஐகோர்ட்டில் பதில் மனுத்தாக்கல்

சென்னை- சேலம் 8 வழிச்சாலை வழக்கு: ஐகோர்ட்டில் பதில் மனுத்தாக்கல்

சென்னை சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படுவதாக வெளிவந்த அறிவிப்பை தொடர்ந்து அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இதுதொடர்பாக முதல்வர் மற்றும் அமைச்சர்களும் பல்வேறு விளக்கங்கள் கொடுத்த போதிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதை ஏற்பதாக இல்லை.

இந்த திட்டத்தை எதிர்த்து பலர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ளப்படாமல் நிலம் கையகப்படுத்தப்படுவதாகவும், அதனை தடை செய்ய வேண்டும் எனவும் தருமபுரியைச் சேர்ந்த நில உரிமையாளர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு குறித்து இன்று தனது பதில் மனுவை சென்னை சேலம் 8 வழிச்சாலை திட்ட இயக்குனர் மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த பதில் மனுவில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே இந்த சாலைத்திட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.மேலும், இந்த திட்டத்தின் மூலம் சுமார் 700 கோடி ரூபாய் அளவிலான எரிபொருள் செலவை குறைக்க முடியும் என்றும், அவசரக்காலங்களில் திருவண்ணாமலை, தருமபுரி மக்கள் சென்னை செல்ல இந்த சாலை உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சென்னை சேலம் இடையேயான பசுமை வழிச்சாலையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தனது பதில் மனுவில் திட்ட இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.