மிரட்டும் டெங்குவை விரட்ட கோவில்களில் யாகம் நடத்த எடப்பாடி உத்தரவு!!

மிரட்டும் டெங்குவை விரட்ட கோவில்களில் யாகம் நடத்த எடப்பாடி உத்தரவு!!

சென்னை: தமிழகம் முழுவதும் மக்களை பாடாய் படுத்தும் டெங்கு காய்ச்சலை ஒழிக்க, கோவில்களில் ரகசிய பூஜைகளையும், யாகங்களையும் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கொள்ளை நோயாக டெங்கு காய்ச்சல் மாறியுள்ளது. 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 120 பேர் வரை மரணமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பால், பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. கொசுவலைகளை கட்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனும் தீவிர ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நோய் தாக்கம் அதிகரிப்பு முதலில் வறட்சி வாட்டி வதக்கிய நிலையில் இப்போது மழை நன்றாக பெய்துள்ளது என்று மகிழ்சியடைய முடியாத வகையில் நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு ஏதோ தெய்வ குற்றம் ஏற்பட்டுள்ளதோ என்று நினைக்கிறாராம் முதல்வர். 

டெங்கு நம்மை ஆட்டிப் படைக்க காரணம் என்ன என்று ஆலோசித்த முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இது பற்றி விவாதித்துள்ளார். நோயை கட்டுப்படுத்த உடனடியாக கோவில்களில் யாகங்கள், பூஜைகள் நடத்தி முடிக்க வேண்டுமென வலியுறுத்தினாராம். கோவில்களில் பூஜைகள் இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரகசிய யாகங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல கோவில்களில் யாகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாம். 

இதையடுத்து விரைவில் டெங்கு கட்டுக்குள் வரும் என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவர் உடல் நலமடைய வேண்டி அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு யாகங்கள் பூஜைகளை செய்தனர். இந்த ஆண்டு டெங்குவை ஒழிக்க சிறப்பு யாகங்கள், பூஜைகளை செய்ய உத்தரவிட்டுள்ளது அரசு.