ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னை எழிலகத்தில் 11-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இதில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், அ.மாயவன், க.மீனாட்சிசுந்தரம், இரா.தாஸ், மோசஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.உண்ணாவிரதம் நேற்று 3-வது நாளாக நடந்தது. அவர்கள் அனைவரும் உண்ணாவிரத பந்தலில் சோர்வாக காணப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் உள்பட 8 பேர் திடீரென மயக்கம் அடைந்தனர். அவர்கள் உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் நிலையில் காணப்பட்டனர்.

இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு அங்கு தயார் நிலையில் இருந்தது. சோர்வாக காணப்படும் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதற்காக தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு இருந்தது.முன்னதாக உண்ணாவிரதம் இருந்தவர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ரங்கராஜன் எம்.பி. உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்காக அவர்களை அரசு அழைத்து பேசவேண்டும் என்றும் தெரிவித்தனர்.மேலும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மத்தியில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொது செயலாளர் துரைப்பாண்டியன் பேசினார்.

இதனிடையே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் முதல்-அமைச்சரை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை எடுத்துக்கூற கோட்டையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். தடையை மீறி ஊர்வலமாக சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் நேற்று இரவு போலீசார் விடுவித்தனர். இதனை தொடர்ந்து இந்த போராட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஒத்திவைத்தனர்.