மாயமான மீனவர்களை மீட்கக்கோரி குமரியில் ரயில் மறியல்

 மாயமான மீனவர்களை மீட்கக்கோரி குமரியில் ரயில் மறியல்

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் மாயமாகியுள்ள மீனவர்களை விரைந்து மீட்கக்கோரி கன்னியாகுமரியில் 10,000-க்கும் மேற்பட்டோர் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப்பணிகளில் அரசு மெத்தனமாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏராளமான மீனவர்கள் லட்சத்தீவுகளில், மகாராஷ்டிரத்தில் மற்றும் பல்வேறு இடங்களில் பத்திரமாக உள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால் அவர்கள் ஏன் இன்னும் ஊர் திரும்பவில்லை’’ எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

மாயமான 1,013 மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும். மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஹெலிகாப்டர்கள், அதிவேக போர்க்கப்பல்களை பயன்படுத்தி, மீட்புப் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் இறையுமன்துறை முதல் இரவிக்குப்பன்துறை வரையுள்ள கடலோர கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். பாதிரியார்கள் ஆண்ட்ரோ மற்றும் ஹெவின்சன் தலைமையில் மீனவ குடும்பங்கள் தமிழக கேரள எல்லைப் பகுதியான சின்னத்துறையில் இருந்து குழித்துறையை நோக்கிப் பேரணி நடத்தினர் .


 குழித்துறை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தடையை மீறி குழித்துறை ரயில் நிலையத்துக்குள் நுழைந்த மீனவ குடும்பங்கள், ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.