கருணாஸ்க்கு வந்த சோதனை,மேலும் ஒரு வழக்கில் கைதாகிறார்

கருணாஸ்க்கு வந்த சோதனை,மேலும் ஒரு வழக்கில் கைதாகிறார்

சென்னை: காமெடி நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த மாதம் 16-ந்தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.நாடார் சமுதாயம் பற்றி தரக்குறைவாக விமர்சித்த அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.நகர் போலீஸ் துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையிலும் பேசினார்.

இதற்காக நுங்கம்பாக்கம் போலீசார் கருணாஸ் மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கருணாஸ் கடந்த மாதம் 23-ந்தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.தனது ஆதரவாளர்களுக்கு மது வாங்கி கொடுப்பதற்காக மட்டுமே தினமும் ரூ.1 லட்சம் வரை செலவு செய்கிறேன். தனது அமைப்பான முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் கொலை செய்யவும் தயங்கக் கூடாது என்றும் கருணாஸ் பேசி இருந்தார்.

இதற்காக அவரை காவலில் எடுக்க போலீசார் மனு செய்தனர். ஆனால் கோர்ட்டு அதனை ஏற்கவில்லை.இந்த நிலையில் ஐ.பி.எல். போராட்ட வழக்கிலும் கருணாஸ் கைது செய்யப்பட்டார். திருவல்லிக்கேணி போலீசார் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். கோர்ட்டில் போலீஸ் காவல் மறுக்கப்பட்டதை தொடர்ந்து இந்த 2 வழக்குகளிலும் கருணாஸ் ஜாமீன் பெற்றார்.இந்த நிலையில் கடந்த ஆண்டு நெல்லை மாவட்டம் புளியங்குடியில் போடப்பட்ட ஒரு வழக்கில் கருணாசை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். புளியங்குடி அருகே உள்ள நெற்கட்டும் செவலில் புலித்தேவன் நினைவிடத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி கருணாஸ் மாலை அணிவிக்க சென்றார்.

அப்போது கருணாஸ் ஆதரவாளர்களுக்கும், தேவர் பேரவை தலைவர் முத்தையா தேவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதல் வெடித்தது.இதில் கருணாஸ் மற்றும் முத்தையா தேவரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 2 தரப்பினரும் அளித்த புகாரில் புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முத்தையா தேவர் காரை சேதப்படுத்தியதாக கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் இப்போது கருணாஸ் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.