தமிழக எல்லைக்கு வந்தது கிருஷ்ணா தண்ணீர்

தமிழக எல்லைக்கு வந்தது கிருஷ்ணா தண்ணீர்

ஊத்துக்கோட்டை: பருவ மழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி மற்றும் புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது. சென்னையில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி கடந்த மாதம் ஜதராபாத்தில் நடைபெற்ற கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக பொதுப் பணித்துறையை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த 7-ந் தேதி காலை கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா தண்ணீர் திறந்து விட்டது.முதலில் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் கூடுதலாக 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் நேற்று மாலை 4.30 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்து சேர்ந்தது.

பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் ஹென்றி ஜார்ஜ், உதவி செயற்பொறியாளர் சுப்புராஜ், உதவி பொறியாளர்கள் சண்முகம், சதீஷ்குமார், பழனிகுமார், பிரதீஷ் ஆகியோர் சிறப்பு பூஜைகள் நடத்தி மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.