ஜல்லிக்கட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வருத்தம் அளிக்கிறது: தலைவர்கள் கருத்து

ஜல்லிக்கட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வருத்தம் அளிக்கிறது: தலைவர்கள் கருத்து

ஜல்லிக்கட்டு வழக்கு அவசர வழக்காக விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வருத்தம் அளிக்கிறது என்று தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது குறித்த வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. இதனால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்கனவே தெரிவித்த சில கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது, அவர்கள் நிச்சயம் தமிழகத்திற்கு சாதகமாக இருக்க மாட்டார்கள் என்பது ஏற்கனவே தெரியும். அதனால் இத்தீர்ப்பு அதிர்ச்சியோ, வியப்போ அளிக்கவில்லை.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வசதியாக அவசரச் சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதையும், அதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிப்பதையும் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் உடனடி விசாரணை வழக்காக எடுத்து கொள்ள வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் இன்று காலை முறையிட்டு இருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் அவ்வாறு உடனடி விசாரணை வழக்காக இதை எடுத்து கொள்ள இயலாது என்றும் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கின் அடிப்படையில்தான் விசாரித்து தீர்ப்பளிக்க முடியும் என்றும் கூறியிருக்கிறது. இது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

பொங்கல் கொண்டாட்டம் தொடங்கி விட்ட நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஓரிரு நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. எனினும் உச்ச நீதிமன்றம் இதனை உடனடி விசாரணையாக எடுத்து கொள்ள மறுதலித்து இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.