மாறுவேடத்தில் வந்த  லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்

மாறுவேடத்தில் வந்த  லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போக்குவரத்து போலீசில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் பதி (வயது 47). இவர் சத்தியில் இருந்து பண்ணாரி, திம்பம் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் லாரிகளை வாகன சோதனை செய்வது போல் தடுத்து நிறுத்தி டிரைவர்களை மிரட்டி லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வந்தது.அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதியை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டார்கள்.

அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2 பேர் டிரைவர், கிளீனர் போல் மாறுவேடத்தில் நேற்று முன்தினம் இரவு லாரியில் சத்தியமங்கலத்தில் இருந்து
பண்ணாரி நோக்கி சென்றார்கள். அப்போது சிக்கரசம்பாளையம் அருகே அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி தனது சொந்த காரில் சென்று தனியாக வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மாறுவேடத்தில் ஓட்டி வந்த லாரியையும் அவர் தடுத்து நிறுத்தி டிரைவராக இருந்தவரிடம் மாமூல் கேட்டார். உடனே லாரியில் மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கீழே இறங்கினார்கள்.அதன்பின்னர் டிரைவர்
போல் மாறுவேடத்தில் இருந்தவர் தான் கொண்டுவந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பதியிடம் கொடுத்தார்.

அதை அவர் பெற்றுக்கொண்ட போது மாறுவேடத்தில் இருந்த 2 பேரும், ‘நாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார். உங்களை விசாரிக்க வேண்டும். சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள்’ என்று கூறி சுற்றி வளைத்தார்கள்.