தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியும் வறட்சி மாநிலமாக அறிவிப்பு!

தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியும் வறட்சி மாநிலமாக அறிவிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். பெரும்பாலான விவசாய நிலங்கள் தண்ணீரின்றி வெடித்துப் போயிருப்பதே இந்த முடிவு எடுக்க காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தாண்டு போதுமான மழை இல்லாததால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள விவசாய நிலங்கள் வறண்டு போயுள்ளன. மழை பொய்த்துப் போனதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.கடன் வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் பயிர்கள் காய்ந்ததால் கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்தார்.இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியும் வறட்சி பாதித்த மாநிலமாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

காரைக்காலில் 4,400 ஹெக்டேர், புதுச்சேரியில் 8,900 ஹெக்டேர் பயிர்கள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.மேலும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, நிலவரி தள்ளுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.