ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிச.31க்குள் இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிச.31க்குள் இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காலியாக உள்ள ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி அறிவித்தார். 

ஜெயலலிதா மறைந்த பிறகு, ஆர்.கே.நகர் தேர்தல் காலியாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அந்த தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் இரு அணிகள், திமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தன. இதைத் தொடர்ந்து எடப்பாடி அணி சார்பில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனிடையே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. 

இந்நிலையில் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் குவிந்தன. இதையடுத்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் என்னதான் சோதனைகளை நடத்தினாலும் பண விநியோகத்தை அவர்களால் தடுக்க இயலவில்லை. இதையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் ரூ.89 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் அங்கு முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்துக் கொண்டே இருந்ததால் அந்த தேர்தல் நடைபெறுவதற்கு இரு நாள்களுக்கு முன்னர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதாவது கடந்த ஏப்.10-ஆம் தேதி இடைத்தேர்தல் எந்த மாநிலத்திலும் இல்லாத நிலையாக ரத்து செய்யப்பட்டது.  இந்நிலையில் இமாச்சல் பிரதேசம் நவம்பர் 9-ஆம் தேதி சட்டசபை தேர்தல் என அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர் குஜராத்க தேர்தல் தேதி வரும் திங்கள்கிழமை அன்று அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அக்சல் குமார் ஜோதி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.