சபரிமலை வன்முறை: 750 பேர் கைது

சபரிமலை வன்முறை: 750 பேர் கைது

திருவனந்தபுரம்:  சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்ததை எதிர்த்து கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. சபரிமலையின் பாரம்பரியத்தை மீறி பெண்கள் தரிசனம் செய்ததற்கு பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக மாநிலம் முழுவதும் அந்த கட்சி போராட்டத்தில் இறங்கியது.

இந்த நிலையில், சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரளா முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்ம சமிதி அமைப்பு அழைப்பு விடுத்து இருந்தது.

இந்த போராட்டம் நேற்று காலை 6 மணியளவில் தொடங்கி தொடர்ந்து 12 மணிநேரம் நடந்தது.  இந்த போராட்டத்தினை தொடர்ந்து பல இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.

கோழிக்கோட்டில் நேற்று காலையில் போராட்டக்காரர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தியும், டயர்களை தீ வைத்து எரித்தும் உள்ளனர் என தகவல் வெளியானது.  இதேபோன்று மாநிலம் முழுவதும் நடந்த வன்முறையில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதனால் பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

நேற்று மாலைவரை, வன்முறையில் 30 போலீசார் காயமடைந்தனர்.  இதுவரை 750 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.