மாணவர்களை குறிவைத்து போதை பொருள் விற்கப்படுவதை போலீசார் தடுக்க வேண்டும்

மாணவர்களை குறிவைத்து போதை பொருள் விற்கப்படுவதை போலீசார் தடுக்க வேண்டும்

காரைக்கால்: காரைக்கால் யூனியன் பிரதேச போராட்டக்குழு பொது செயலாளர் அன்சாரிபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியை தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட ஒரு சில பள்ளி, கல்லூரிகள் அருகே, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் போதைப்பொருள், புகையிலையைக் கொண்டு தயாரிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது. இதன் பெயர் ‘கூல் லிப்‘ என கூறுகின்றனர்.

சில வாரங்களுக்கு முன் புதுச்சேரியில் அரசுப் பள்ளி அருகே மாணவர் ஒருவர் தடுமாறி சுற்றித் திரிந்ததை பார்த்த ஆசிரியர் ஒருவர், மாணவர் அருகே சென்று பார்த்தபோது, அந்த மாணவர் வாயில் எதையோ மென்று கொண்டிருந்தது தெரியவந்தது. மாணவனின் பாக்கெட்டை சோதித்தபோது, அது போதைப்பொருள் என தெரியவந்ததாக கூறப்படுகிறது.

பள்ளிகளின் அருகில் இருக்கும் பெட்டிக்கடைக்காரர்களே இந்த பொருளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர். இது வாய் புற்றுநோயை விரைவாக ஏற்படுத்தும் ஆபத்துடையது, மேலும், ஒரு மாணவன் இதை பழகினால் மற்றொரு மாணவனுக்கு எளிதாக பழக்கம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட போலீசார் உடனடியாக சோதனைசெய்து, இந்த போதைபொருளை பறிமுதல் செய்யவேண்டும். இல்லையேல், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். இவ்வாறு அவர் கூறினார்.