நாகாலாந்து சுற்றுலா – மயக்கும் இயற்கை வனப்பின் தரிசனம்!

நாகாலாந்து சுற்றுலா – மயக்கும் இயற்கை வனப்பின் தரிசனம்!

இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் வெகுதூரத்தே வீற்றிருக்கும் ஒரு சிறிய மலைப்பிரதேச மாநிலம்தான் நாகாலாந்து. விவசாயத்தை தொழிலாக கொண்ட எளிமையான அமைதியான மக்கள் வசிக்கும் இம்மாநிலத்தில் பிரமிக்க வைக்கும் மலை எழிற்காட்சிகள், மயங்க வைக்கும்  பூர்வகுடியினரின் பாரம்பரிய கலாச்சாரம் என்று ஏராளம் பார்த்து ரசிக்கவும் அனுபவிக்கவும் காத்திருக்கின்றனமுற்றிலும் மாறுபட்ட நாகலாந்து மண்ணிற்கு ஒரு முறை விஜயம் செய்தீர்கள் என்றால் காலம் முழுக்க மறக்க முடியாத அளவுக்கு பரவசமூட்டும் நினைவுகளை உங்களுடன் கொண்டு செல்வீர்கள். உண்மையில் இயற்கையை வர்ணிக்க மனித மொழிக்கு சக்தியே இல்லை என்பதை நாகாலாந்து வரும்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
நாட்டின் மிகச்சிறிய மாநிலமான நாகாலாந்து ஒரு மர்மமான பூமியாகவும் நெடுங்காலமாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. ஆழமான பாரம்பரிய கலாச்சாரம் வேரூன்றியிருக்கும் இந்த மாநிலம் தனது விருந்தினர்களை ஒருபோது பிரமிக்க வைக்க தவறுவதேயில்லை.
‘கீழைத்தேசத்து சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் அளவுக்கு இம்மாநிலத்தின் இயற்கை வனப்பு சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றிருக்கிறது. சுருங்கச்சொன்னால் நாகாலாந்து சுற்றுலா என்பது வேறொன்றுமில்லை – அது இயற்கைச்சுற்றுலாதான். அதாவது மாசுபடாத கன்னிமை மாறாத இயற்கையின் வனப்பை அருகிருந்து தரிசிக்கும் அற்புதச்சுற்றுலா.
இயற்கை அன்னையின் அரவணைப்பு
பயணத்தை திட்டமிடுவதற்கு முன்பே நீங்கள் இயற்கைக்காட்சிகளை ஏராளமாக பார்த்து ரசிக்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்புடனேயே செல்லலாம். அந்த அளவுக்கு செழிப்பான பசுமையான இயற்கைக்காட்சிகள் உயர்ந்தோங்கிய மலைகள் ஆங்காங்கு பின்னணியில் எழும்பியிருக்க படர்ந்து நிரம்பியிருக்கின்றன இந்த எழிற்பூமியில்.
திரும்பும் போது நிச்சயம் திகட்டாத நினைவுகளோடு திரும்பி வரலாம். இயற்கை ரசிகரா நீங்கள், அப்படியானால் உங்கள் வாழ்நாளில் நீங்கள் இந்தியாவில் விஜயம் செய்ய வேண்டிய இடங்களில் இந்த நாகலாந்து பூமியை முதலில் குறித்துக்கொள்ளுங்கள். இது போதும் என்ற நிறைவுடன் ஊர் திரும்புவீர்கள்.
நாகாலாந்தின் புவியியல் அமைப்பும் பருவநிலையும்
நாகாலாந்து மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் யாவும் மலைப்பாங்கானவையே. இது மேற்கில் அஸ்ஸாம் மாநிலத்தையும், தெற்கில் மணிப்பூரையும், வடக்கில் அருணாச்சல பிரதேசத்தையும் தனது எல்லைகளாக கொண்டிருக்கிறது.
16 பூர்வ குடி இனத்தார் வசிக்கும் 7 மாவட்டங்களை இது உள்ளடக்கியிருக்கிறது. பசுமையான தாவரச்செழிப்பு நிரம்பி வழியும் இப்பூமியின் பருவநிலை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அவ்வளவு குளுமை அவ்வளவு இனிமை. வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் இங்கு பயணம் மேற்கொள்ளலாம்.
மக்கள் – கலாச்சாரம்- உணவு
நாகாலாந்து பிரதேசத்தில் முக்கிய உணவு மீன் இறைச்சி ஆகியவைதான். இந்த இரண்டும் பலவிதமான முறைகளில் சமைக்கப்பட்டு சுவையான பண்டங்களாக பரிமாறப்படுகின்றன.
வேகவைத காய்கறிகள், இறைச்சி மட்டும் அரிசி போன்றவை இவர்களது உணவுப்பட்டியலில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. கள்ளம் கபடமில்லாத இந்த மக்களின் உபசரிப்பும் அன்பும் நம்மை சமயங்களில் வெட்கப்பட வைக்கும் அளவுக்கு தூய்மையானது.
இவர்களது கலாச்சாரம் பற்றி இந்தியா முழுமைக்கும் தெரிந்திருக்கும் என்பதிலும் சந்தேகம்  இல்லை. தேசிய நிகழ்ச்சிகளில் வண்ணமயமான உடைகளுடன் மயங்க வைக்கும் தோற்றத்துடனும் அசைவுகளுடனும்,  வித்தியாசமான இசைக்கருவிகளுடனும் தனித்தன்மையான தோன்றும் கலைக்குழுவினரை பார்த்திருக்கிறீர்களா?
அவர்கள் நாகலாந்தை சேர்ந்த பாரம்பரிய கலைஞர்களாக இருக்கக்கூடும். நாகாலாந்து நாகரிகத்தின் கலைப்பாரம்பரிமானது சொக்க வைக்கும் இயல்புடைய பூர்வ குடி கலாச்சாரம் என்பது இந்தியருக்கெல்லாம் பெருமை என்பதில் சந்தேகமே இல்லை.
நாகாலாந்தின் முக்கிய சுற்றுலாத்தலங்கள்
நாகாலாந்து மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களாக ரம்மியமான கொஹிமா, திமாபூர், மோன்,வோக்கா, பேரென் மற்றும் இதர இடங்கள் அமைந்திருக்கின்றன. இது நாள் வரையில் உங்கள் கவனத்திற்கு நாகாலாந்து மாநிலம் வராமற் போயிருக்கலாம்.