பாகிஸ்தானில் டிரெய்லருடன் வேன் மோதி விபத்து- குழந்தைகள் உள்பட 14 பேர் உடல் கருகி பலி

 பாகிஸ்தானில் டிரெய்லருடன் வேன் மோதி விபத்து- குழந்தைகள் உள்பட 14 பேர் உடல் கருகி பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் டிரெய்லருடன், சற்றும் எதிர்பாராத வகையில் வேன் பயங்கரமாக மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 14 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் ராணுவ தலைநகர் ராவல்பிண்டி சாக்ரி இன்டர்சேஞ்ச் அருகே, நேற்று ஒரு பயணிகள் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே வந்த ஒரு டிரெய்லருடன், சற்றும் எதிர்பாராத வகையில் அந்த வேன் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்த வேன் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக தீயணைப்பு படையினர், விரைந்து வந்து, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

இருப்பினும் இந்த கோர விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவக்கல்லூரிக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 9 பேர் இறந்தனர். 3 பேர் மேல் சிகிச்சைக்காக ராவல்பிண்டி ராணுவ ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்.

இந்த கோர விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாதபடிக்கு கரிக்கட்டைகளாகி விட்டன. அவற்றுக்கு மரபணு பரிசோதனை செய்து அடையாளம் காணப்படும் என தகவல்கள் கூறுகின்றன. வேனில் சி.என்.ஜி. கியாஸ் சிலிண்டர் பொருத்தி இருந்ததால்தான் தீப்பற்றி எரிந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறின.

ஆனால் வேன் டிரைவர் ஆசிப், தூங்கியதால்தான் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி, டிரெய்லருடன் மோதியதாக போலீஸ் தரப்பினர் கூறுகின்றனர். பாகிஸ்தானில் 2011-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 9 ஆயிரம் சாலை விபத்துக்கள் நேர்வதாகவும், அவற்றில் சராசரியாக 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் உயிர்ப்பலி ஆகி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.