திருநங்கைகளுக்கான முதல் தொழிற்பயிற்சி பள்ளி கூடம் பாகிஸ்தானில் திறப்பு...!

 திருநங்கைகளுக்கான முதல் தொழிற்பயிற்சி பள்ளி கூடம் பாகிஸ்தானில் திறப்பு...!

பாகிஸ்தானில் திருநங்கைகள் கல்வி மற்றும் பிற திறமைகளை வளர்த்து கொள்வதற்கான முதல் தொழிற்பயிற்சி பள்ளி கூடம் ஒன்று இன்று தொடங்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் அதிக மக்கள் தொகை கொண்ட 2வது நகரம் லாஹூர்.  இங்கு 30 ஆயிரம் திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் இங்கு திருநங்கைகள் கல்வி மற்றும் பிற துறைகளில் தங்களது திறமைகளை வளர்த்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு பயிற்றுவிக்க தி ஜென்டர் கார்டியன் என்ற தொழிற்பயிற்சி பள்ளி கூடம் ஒன்று இன்று தொடங்கப்பட்டு உள்ளது.

இங்கு அவர்கள் தொடக்க நிலையில் இருந்து மெட்ரிகுலேசன் வரையிலான 12 வருட படிப்புகளை படிக்கலாம்.  கல்வி தவிர்த்து சமையல், பேஷன் டிசைனிங் மற்றும் ஒப்பனை என அவர்கள் விருப்பப்படும் 8 துறைகளில் பயிற்சி அளிக்கும் வகையிலான வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.இதுபற்றி பள்ளி உரிமையாளர் ஆசிப் ஷாஜத் கூறும்பொழுது, சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்த திருநங்கைககளுக்கு கல்வி வழங்க இந்த பள்ளி கூடம் தொடங்கப்பட்டு உள்ளது.  அவர்கள் குழந்தையாக இருந்ததில் இருந்து தனியாக வாழ வற்புறுத்தப்படுவது துரதிருஷ்டமிக்கது என கூறியுள்ளார்.

இதுவரை 40 திருநங்கைகள் இந்த பள்ளியில் சேர்ந்துள்ளனர்.  உலகிலேயே இஸ்லாமிய நாடுகளில் திருநங்கைகளுக்கான ஒரே பள்ளி கூடம் இதுவாகும் என்றும் ஷாஜத் கூறியுள்ளனர்.இந்த பள்ளியில் சேர்வதற்கு வயது ஒரு தடையில்லை.  இங்கு 3 திருநங்கைகள் உள்பட 15 பேர் ஆசிரியர்களாக உள்ளனர்.