“டோக்லாம்”  இந்திய மற்றும் சீன படைகள் வாபஸ்

“டோக்லாம்”  இந்திய மற்றும் சீன படைகள் வாபஸ்

புதுடில்லி: சர்ச்சைக்குரிய டோக்லாம் எல்லை பகுதியில் குவித்து வைத்திருந்த படைகளை இந்தியா மற்றும் சீனா வாபஸ் பெற்றுள்ளன. சிக்கிம் எல்லைப்பகுதியில் இந்தியா-சீனா-பூடான் நாட்டு எல்லைகள் சந்திக்கும் முச்சந்திப்பு டோக்லாம் என அழைக்கப்படும். இந்த பகுதியில், ராணுவ வாகனங்கள் மற்றும் தளவாடங்களை எல்லைப்பகுதிக்கு எடுத்துச்செல்லும் நோக்கில் சாலை பணிகளை சீனா செயல்படுத்தி வந்தது.பூடான் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைப்போல சர்ச்சைக்குரிய அந்த பகுதியில் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய ராணுவம், சமீபத்தில் அந்த சாலைப்பணிகளை தடுத்து நிறுத்தியது. 

இதைத்தொடர்ந்து சீனா சுமார் 3 ஆயிரம் வீரர்களை அங்கே குவித்தது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை எல்லைக்கு அனுப்பி வைத்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் கொடி கூட்டம் மற்றும் சில பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. 

இந்நிலையில், சர்ச்சைக்குரிய டோக்லாம் எல்லை பகுதியில் இருந்து இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் படைகளை திரும்ப பெற்றுள்ளன. மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார், படைகள் திரும்ப பெறப்பட்ட தகவலை தெரிவித்துள்ளார்.