ஈரான்-ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்- 61 பேர் பலி...300 க்கும் மேற்பட்டோர் காயம்

ஈரான்-ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்- 61 பேர் பலி...300 க்கும் மேற்பட்டோர் காயம்

தெஹ்ரான்: ஈரான்-ஈராக் எல்லையையொட்டியுள்ள பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 61 பேர் பலியாகியுள்ளனர்.

ஈரான் -ஈராக் எல்லையை ஒட்டியுள்ள பிராந்திய பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், ஈரானில் உள்ள 14 பிராந்தியங்கள் குலுங்கின.  வீடுகள் குலுங்கியதால், பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஒன்று திரண்டனர். சில கட்டிடங்கள் உடைந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தால், 61 பேர் பலியாகியுள்ளதாக ஈரானிய தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 300 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு உள்துறை மந்திரிக்கு ஈரான் அதிபர் ரவுகானி உத்தரவிட்டுள்ளார்.  இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஈரானின் வடமேற்கு, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். 

நிலநடுக்கத்தால் ஈராக்கில் 6 பேர் பலியானதாகவும் 31 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும்  ஈரானிய தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் ஈராக் அரசு தரப்பில் இந்த தகவலை உறுதி செய்யவில்லை. ஈராக்கில் உள்ள புறநகர் பகுதியான ஹலப்ஜா நகரில் சேதம் அதிகம் இருக்க என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரானில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 26 ஆயிரம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.