லண்டனில் வேன் மூலம் மோதி மீண்டும் தாக்குதல்: மசூதியில் இருந்து திரும்பிய ஏராளமானோர் பலி

லண்டனில் வேன் மூலம் மோதி மீண்டும் தாக்குதல்: மசூதியில் இருந்து திரும்பிய ஏராளமானோர் பலி

லண்டன்: வடக்கு லண்டனில் செவன் சிஸ்டர்ஸ் ரோட்டில் உள்ள மசூதி அருகே நேற்று இரவு தொழுகை முடித்து வெளியே வந்த மக்கள் கூட்டத்தின் மீது வேன் மோதியதில் ஏராளமானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து லண்டன் பாலத்தில் நடந்து சென்றவர்கள் மீது வேன் மூலம் மோதியும் அருகேயுள்ள மார்க்கெட்டில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியும் 7 பேரை கொன்றனர்.இதனால் லண்டனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் வேன் மூலம் மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வடக்கு லண்டனில் செவன் சிஸ்டர்ஸ் ரோடு உள்ளது. இங்கு மசூதி உள்ளது. புனித ரமலான் மாதம் என்பதால் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொழுகை நடந்தது. தொழுகை முடிந்ததும் இரவு 12.20 மணியளவில் ஏராளமானவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகமாக வந்த வேன் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.

இதனால் அலறியடித்துக் கொண்டு பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரைந்து வந்து வேன் ஓட்டி வந்தவரை கைது செய்தனர். ஆனால் அந்த நபர் குறித்து போலீசார் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. அவர் தீவிரவாதியா? எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் அந்த வேனை சம்பந்தப்பட்ட நபர் திட்டமிட்டு மசூதி தொழுகை முடிந்து திரும்பியவர்கள் மீது மோதி இருக்கிறார் என பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் தலைவர் ஹருன்கான் தெரிவித்துள்ளார்.வேன் மோதியதில் ஏராளமானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால் விவரங்கள் வெளியாகவில்லை. மேலும் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமிக்கப்பட்டுள்ளனர்.