ஹார்வர்டு பல்கலை.யில் தமிழ் இருக்கைகள் அமைக்க மிஸ்ஸோரி தமிழ் சங்கம் நன்கொடை!

ஹார்வர்டு பல்கலை.யில் தமிழ் இருக்கைகள் அமைக்க மிஸ்ஸோரி தமிழ் சங்கம் நன்கொடை!

மிஸ்ஸோரி: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்காக மிஸ்ஸோரி தமிழ் சங்கம் சார்பில் 30 ஆயிரம் டாலர்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் செம்மொழிகளான 7 மொழிகளில் தமிழை தவிர மற்ற 6 செம்மொழிகளுக்கும் இருக்கைகள் உள்ளன. ஆனால் மூத்த மொழியான தமிழுக்கு அந்த இருக்கை இதுவரை அமையப் பெறவில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தென்கிழக்கு ஆசிய கல்வித்துறையின் ஓர் அங்கமாக சங்கத்தமிழ் இருக்கை ஒன்றினை நிறுவுவதற்கான முயற்சியில் அமெரிக்காவில் வாழும் டாக்டர்கள் ஜானகிராமன், சம்பந்தம் ஆகிய இருவரும் இறங்கினர்.

தமிழ் இருக்கைக்கான அனுமதி பெறுவதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.40 கோடி தேவை. இதில் ரூ.6 கோடியே 70 லட்சத்தை டாக்டர்கள் ஜானகிராமன், சம்பந்தம் ஆகிய 2 பேரும் வழங்கியுள்ளனர். தமிழக அரசு தன் பங்காக 10 கோடி ரூபாய் வழங்கியது.  மீதமுள்ள ரூ.23 கோடிக்கு அதிகமான நிதியை உலக தமிழர்களிடம் நன்கொடையாக அளித்து வருகின்றனர். 

இந்நிலையில், நிதி திரட்டும் முயற்சியில் மிஸ்ஸோரி தமிழ்ச் சங்கம் சார்பில் செயின்ட் லூயிஸ் நகரில் முத்தமிழ் விழா மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முத்தமிழ் விழாவில் தமிழ் நாடக மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அதைத்தொடர்ந்து கடந்த 11-ம் தேதி நிதி திரட்டும் இசை விழா நடைபெற்றது. இந்த விழாலில் பாடகர்கள் தமிழ் பாடல்களை பாடினர். நிகழ்ச்சி முடிவில் திரட்டப்பட்ட 30,000 டாலர்கள் மிஸ்ஸோரி தமிழ் சங்கத்தால் ஹார்வர்டு பல்கலைகழகத்திற்கு தமிழ் இருக்கைகள் அமைப்பதற்காக வழங்கப்பட்டது.