சிறுபான்மையினர் நட்பு நாடாக பாகிஸ்தான் அங்கீகரிக்கப்படும்: நவாஸ் ஷெரீப்...

சிறுபான்மையினர் நட்பு நாடாக பாகிஸ்தான் அங்கீகரிக்கப்படும்: நவாஸ் ஷெரீப்...

பாகிஸ்தான் நாடு விரைவில் சிறுபான்மையினர் நட்பு நாடாக அங்கீகரிக்கப்படும் என பிரதமர் நவாஸ் ஷெரீப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தானில் இந்துக்களின் புனித தலங்களில் முக்கியமானது கடாஸ்ராஜ் ஆலயம். இஸ்லாமாபாத் அருகில் உள்ள சாக்வல் மாவட்டத்தில் இந்த ஆலயம் உள்ளது. இந்நிலையில், பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று கடாஸ்ராஜ் சென்று கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக் குளத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்தார். மேலும், கோவில் வளாகத்தை புதுப்பிக்கவும் உத்தரவிட்டார்.

கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நவாஸ் ஷெரீப் பேசியபோது, ‘பாகிஸ்தானை சிறுபான்மையினர் நட்பு நாடு என்ற அடையாளம் காட்டும் கொள்கையில் அரசு தொடர்ந்து செயல்படுகிறது. அனைத்து மதத்தினருக்கும் சம உரிமைகள் வழங்கப்படுகின்றன. 

சிறுபான்மை மக்கள் சிறப்பாக வாழ்வதற்கு தேவையான சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எனவே, பாகிஸ்தான் நாடு சிறுபான்மையினர் நட்பு நாடு என்ற அங்கீகாரம் பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

சிறுபான்மையினரின் வழிபாட்டு பகுதிகளை பாதுகாத்து விரிவாக்கம் செய்வதுடன், பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பையும் அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். 

நான் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொருவருக்கும் பிரதமர். நாட்டைப் பாதுகாக்க அனைத்து சமுதாயத்தினரும் கைகோர்த்து செயல்படுகின்றனர். நாட்டின் அமைதி மற்றும் வளத்திற்காக தங்கள் பங்களிப்பை செய்கின்றனர்’ என்றார்.